ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணி குறித்து ஒரே வார்த்தையில் பதிலளித்த வார்னர்!
ஐபிஎல் 50ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 207-3 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 186-8 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.
டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் டேவிட் வார்னர்- ரோவ்மென் பாவெல் ஜோடி தான். ஓப்பனிங் மந்தீப் சிங் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் வந்த டேவிட் வார்னர் ஹைதராபாத் அணி பவுலிங்கை சொல்லி சொல்லி அடித்தார். 58 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 92 ரன்களை விளாசினார்.
வார்னருக்கு உறுதுணையாக நின்ற ரோவ்மென் பாவெல் 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களை விளாசினார். வார்னர் சதமடித்திருக்க வேண்டியது தான். ஆனால் கடைசி ஓவரை பெருந்தன்மையாக பாவெல்லிடம் கொடுத்து நான் ஸ்ட்ரைக்கரில் நின்றார். இதனால் அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்வது குறித்து வார்னர் பேசியுள்ளார். அதில், “ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட எனக்கு கூடுதல் ஊக்குவிப்பு எதுவுமே தேவையில்லை. கடந்த காலங்களில் நினைத்துப்பார்த்தாலே அந்த அணிக்கு எதிராக ரன் மழை பொழிவேன். அதுதான் இன்று நடந்தது” எனக்கூறினார்.
தொடர்ந்து பாவெல்லின் ஆட்டம் குறித்து பேசிய அவர், “பாவெல் மிகவும் துடிப்பாக இருக்கிறார். ஆனால் எனக்கு வயதாகிவிட்டது. ரன் ஓட சிரமமாக உள்ளது. தற்போது 117மீ சிக்ஸர் அடிக்கிறார்கள். ஆனால் நான் இன்றும் 85 மீ தான் அடிக்கிறேன். ஜிம்மிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என நினைக்கிறேன்” என வேடிக்கையாக பதில் அளித்தார்.