டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த டேவிட் வார்னர்!

Updated: Thu, Jun 06 2024 12:06 IST
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த டேவிட் வார்னர்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் அரைசதங்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களையும், டேவிட் வார்னர் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களையும் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் மெஹ்ரான் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அந்த அணியில் அதிகபட்சமாக அயான் கான் 38 ரன்களையும், மெஹ்ரான் கன் 27 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மார்கஸ் ஸ்டொய்ன்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட்டில் 110 அரைசதங்களை அடித்து சாதனை படைத்த நிலையில், அதனை தற்போது 111 அரைசதங்களை அடித்து டேவிட் வர்னர் முறியடித்துடன் புதிய உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 

அதேபோல் இப்போட்டியில் டேவிட் வார்னர் 22 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3121 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் ஆரோன் ஃபிஞ்சின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக ஆரோன் ஃபிஞ்ச் 3120 ரன்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில் அதனை தற்போது வார்னர் முறியடித்து முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள்

  • 111 அரைசதங்கள் - டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
  • 110 அரைசதங்கள் - கிறிஸ் கெய்ல்(வெஸ்ட் இண்டீஸ்)
  • 105 அரைசதங்கள் - விராட் கோலி (இந்தியா)
  • 101 அரைசதங்கள் - பாபர் ஆசாம் (பாகிஸ்தான்)
  • 89  அரைசதங்கள்- ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த ஆஸி வீரர்கள்

  • 3121 ரன்கள் - டேவிட் வார்னர்
  • 3120 ரன்கள் - ஆரோன் ஃபிஞ்ச்
  • 2468 ரன்கள் - கிளென் மேக்ஸ்வெல்
  • 1462 ரன்கள் - ஷேன் வாட்சன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை