சிபிஎல் 2023: ரஹீம் கார்ன்வால் மிரட்டல் சதத்தால் பார்போடாஸ் ராயல்ஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் 2023 கரீபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேஃட்ரியட்ஸ் மற்றும் பார்போடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. பார்போடாஸ் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 220/4 ரன்கள் சேர்த்து மிரட்டியது. அந்த அணிக்கு ஆண்ட்ரே ஃபிளட்சர் 56 , வில் ஸ்மித் 63, கேப்டன் செர்பான் ரூத்தார்ஃபோர்ட் 65 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தனர்.
மறுபுறம் பந்து வீச்சில் தடுமாற்றமாக செயல்பட்ட பார்போடாஸ் சார்பில் அதிகபட்சமாக சுழல் பந்து வீச்சாளர் ரஹீம் கார்ன்வால் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 221 என்ற கடினமான இலக்கை துரத்திய பார்போடாஸ் அணிக்கு கெய்ல் மேயர்ஸ் 5 பவுண்டரியுடன் 22 ரன்கள் விளாசி அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹீம் கார்ன்வால் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ஆரம்பம் முதலே எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கி விரைவாக ரன்களை சேர்த்தார்.
அவருடன் அடுத்ததாக களமிறங்கி தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாட முயற்சித்த லௌரி எவன்ஸ் 2ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 24 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்து அரை சதம் கடந்த ரஹீம் கார்ன்வால் அதே வேகத்தில் எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் மொத்தம் 4 பவுண்டரி 12 சிக்சர்களைப் பறக்க விட்டு சதமடித்து 48 பந்துகளில்102 ரன்களை 212.50 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார்.
குறிப்பாக உடல் பருமனாக இருப்பதால் வேகமாக ஓட முடியாத அவர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி நேரடியாக விளையாடுவதற்காக பெரும்பாலும் தொடக்க வீரராகவே களமிறங்குவார். இருப்பினும் இதே தொடரின் முதல் போட்டியின் முதல் பந்திலேயே அருகில் அடித்து விட்டு சிங்கிள் எடுப்பதற்காக சற்று சோம்பேறித்தனமாக ஓடிய அவர் க்ரீசை தொடுவதற்கு முன்பாக ரன் அவுட்டாகி கோல்டன் டக் அவுட்டானார். அப்போது நேரலையில் வர்ணனை செய்த சில முன்னாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்களும் அவரை கிண்டலடித்தனர்.
ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டியில் சரவெடியாக விளையாடி சதமடித்த அவர் தனது பேட்டை கீழே போட்டு “விமர்சனங்களுக்கு பதிலடியாக தம்முடைய பேட் பேசியுள்ளதாக” பேசாமலேயே மாஸ் பதிலடி கொடுத்து கொண்டாடினார். அந்த வகையில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக எடையுடன் விளையாடிய வீரர் என்ற தனித்துவமான உலக சாதனை படைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் அவர் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு உடல் ஒரு தடையல்ல என்பதை மீண்டும் இம்முறை நிருபித்து பாராட்டுகளை பெற்றார்.
அப்படி அவர் கொடுத்த நல்ல த்டக்கத்தை பயன்படுத்தி இறுதியில் கேப்டன் ரோமன் போவல் 49 ரன்களை விளாசி தேவையான ஃபினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவரிலேயே 223 ரன்கள் எடுத்த பார்போடாஸ் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. அந்த வகையில் பார்படாஸ் அணியின் வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றியதுடன் 2 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ரஹீம் கார்ன்வால் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.