இந்திய அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - தசுன் ஷானகா

Updated: Sat, Jul 24 2021 14:36 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மழையின் காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாட துவங்கியது. 

இப்போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தாலும் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களையும் முழுவதுமாக முடிக்காமல் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சயா, ஜெயவிக்ரமா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை பெற்றது. அந்த அணி சார்பாக அவிஷ்கா பெர்னாண்டோ 76 ரன்களையும், ராஜபக்சே 65 ரன்கள் குவித்தனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனகா, “இந்த ஒருநாள் தொடரை வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த தொடர் முழுவதும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான பவுலிங்கை இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் இளம் வீரர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு பங்களிப்பு இருந்தது.

நிச்சயம் இந்த வெற்றியை நாங்கள் வருங்காலத்திலும் தொடர்வோம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது இதுபோன்று இளம் வீரர்களின் பங்களிப்பு தொடர்ச்சியாக பங்களிப்பது அவசியம். இந்த வெற்றி நிச்சயம் இலங்கை அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியை எங்களது மண்ணில் வீழ்த்தியது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்காக பங்களித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை