தனது அதிரடி ஆட்டத்திற்கு காரணம் தோனி தான் - டேவன் கான்வே!
ஐபிஎல் 15ஆவது சீசன் 55ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 41 (33), டேவன் கான்வே 87 (49) இருவரும் இணைந்து 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதனைத் தொடர்ந்து ஷிவம் துபே 32 (19), மகேந்திரசிங் தோனி 21 (8) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்களை சேர்த்ததால், சிஎஸ்கே 20 ஓவர்களில் 208/6 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 25 (20), ரிஷப் பந்த் 21 (11), ஷர்தூல் தாகூர் 24 (19) ஆகியோர் மட்டுமே 20+ ரன்களை அடித்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால், அந்த அணி 17.4 ஓவர்களில் 117/10 ரன்களை எடுத்து, 91 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில் கான்வே 87 (49) ரன்கள் அடித்ததால்தான், சிஎஸ்கேவால் 200+ ரன்களை அடிக்க முடிந்தது. இதனால், ஆட்டநாயகன் விருதினை வென்றார். இப்போட்டியில் மட்டுமல்ல இதற்குமுன் கடைசி இரண்டு போட்டிகளிலும் அரை சதம் அடித்து ஹாட்ரிக் அரை சதம் அடித்த வீரராக திகழ்கிறார்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்த பிறகு பேசிய டிவோன் கான்வே, தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கான காரணம் குறித்துப் பேசினார். ‘‘இந்த பிட்சில் எப்படி விளையாடுவது, எந்த பௌரலை டார்கெட் செய்ய வேண்டும் என்பது குறித்து நான் பேட்டிங் கோச் மைக் ஹசியிடம் பேசிவிட்டுதான் களத்திற்குள் வந்தேன். ருதுராஜுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் அதிரடியாக விளையாடியதற்கு தோனிதான் முக்கிய காரணம். கடந்த போட்டியில் ஸ்வீப் ஷாட் ஆடிதான் ஆட்டமிழந்தேன். இதனை கவனித்து, இப்போட்டி துவங்குவதற்கு முன், என்னை ஸ்ட்ரைட் பேட் போட்டு விளையாட சொன்னார். இதனால்தான், ரன்களை குவிக்க முடிந்தது’’ எனக் கூறினார்.