சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்கும் திமுத் கருணரத்னே?
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் நடைபெற்று முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில் இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இப்போட்டியின் மூலம் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான திமுத் கருணரத்னே தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இப்போட்டியுடன் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய திமுத் கருணரத்னே, “ஒரு டெஸ்ட் வீரர் ஒரு வருடத்திற்கு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவும், தனது ஃபார்மை பராமரிக்கவும் தன்னைத்தானே உந்துதலாக வைத்திருப்பது கடினம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 2-3 ஆண்டுகளில், நாங்கள் இருதரப்பு தொடர்களைக் குறைவாகவே விளையாடிவுள்ளோம். எனது தற்போதைய ஃபார்ம் மற்றொரு காரணம்; எனது 100 டெஸ்ட்களை முடித்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிய்ம் முடிவடைகிறது.
அதனால் இது நான் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் என்று நினைத்தேன். எனக்கென்று சில தனிப்பட்ட திட்டங்கள் உள்ளன. ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சாண்டிமால் போன்ற மற்ற மூத்த வீரர்களிடம் பேசிய பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவதற்குப் பதிலாக, நாங்கள் ஒவ்வொருவராக ஓய்வை அறிவிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளை மட்டுமே விளையாடுவதால், எனது இலக்கான 10,000 ரன்களைஅடைய முடியாது என்பது எனக்குத் தெரியும், எனவே நான் முதலில் ஓய்வு பெற நினைத்தேன். இதுவரை நான் சாதித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது 100ஆவது டெஸ்டில் விளையாடுவது போன்ற மகிழ்ச்சியான தருணத்துடன் எனது ஓய்வு அறிவிப்பை அறிவிக்க விரும்புகிறேன். மேலும் நான் அந்த போட்டியில் சதமடிக்க விரும்புகிறேன்.
என்னுடைய 100வது டெஸ்டில் மட்டுமல்ல, நான் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடித்து, என் அணிக்கு பங்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னுடைய 100ஆஅவது டெஸ்டில் 100 ரன்கள் எடுத்தால் அது ஒரு சிறந்த மைல்கல்லாக இருக்கும். எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் கனவும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,000 ரன்கள் அடிப்பதுதான். அது ஒரு பெரிய சாதனை” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான திமுத் கருணரத்னே இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதங்கள், 39 அரைசதங்களுடன் 7172 ரன்களை அடித்துள்ளார். மேற்கொண்டு 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 11 அரைசதங்கள் என 1316 ரன்களை எடுத்துள்ளார். மேற்கொண்டு இடைபட்ட காலத்தில் அவர் இலங்கை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இலங்கை டெஸ்ட் அணி: தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்ன, பாதும் நிஸ்ஸங்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதாரா, தினேஷ் சண்டிமல், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சோனல் தினுஷா, பிரபாத் ஜெயசூரியா, ஜெஃப்ரி வான்டர்சே, நிஷான் பீரிஸ், அசிதா பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, மிலன் ரத்நாயக்க.