வார்த்தை சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக் - கொந்தளிப்பில் நெட்டிசன்கள்!
இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்டத்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்தார்.
இந்தியாவுக்காக 26 டெஸ்டுகள், 94 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் தொலைக்காட்சிக்காக வர்ணனையாளராகப் பணியாற்றி பாராட்டுகளைப் பெற்றார். தற்போது இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரிலும் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தின் வர்ணனையின்போது பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட் பற்றி வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பேசிய தினேஷ் கார்த்திக் “பேட்கள் மீதான அதிருப்தி பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் இருக்கும். பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்குத் தங்களுடைய பேட்களைப் பிடிக்காது. அவர்களுக்கு அடுத்த பேட்ஸ்மேன்களின் பேட்களைப் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல. அவர்கள் எப்போதும் நன்றாக இருப்பது போல இருக்கும்” என வேடிக்கையாக கருத்து தெரிவித்தார்.
ஆனால் அவர் பேட்களைப் பற்றி பேசும் போது அடுத்த வீட்டு மனைவி பற்றிய கருத்தை நுழைத்து மோசமாகப் பேசியதற்காகச் சமூகவலைத்தளங்களில் பலரும் தினேஷ் கார்த்திக்கை விமர்சித்துள்ளார்கள்.