ஐபிஎல் 2022: இந்த விருதை பெரும் முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக் தான்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியனானது.
அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது. மேலும் அணியின் அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு ஐபிஎல்-ன் அதிநவீன ஸ்பெஷல் வாட்ச்கள் வழங்கப்பட்டன.
அதேபோல் 2ஆவது இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு பதக்கங்களும், ரூ.12.50 கோடி பரிசும் தரப்பட்டது. 3ஆவது இடம் பிடித்த ஆர்சிபிக்கு ரூ.7 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் இந்த தொடரின் அதிக ரன்களை குவித்ததற்காக ஆரஞ்ச் கோப்பையை வென்றார். அவர் 17 இன்னிங்ஸ்களில் 863 ரன்களை அடித்தார். இதற்காக அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை தரப்பட்டது.
அதேபோல் மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யுவேந்திர சாஹல் 17 இன்னிங்ஸ்களில் 27 விக்கெட்கள் எடுத்து, பர்புள் நிற தொப்பையை பெற்றார். அவருக்கும் ரூ. 10 லட்சம் தரப்பட்டது.
மேலும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடி காட்டிய வீரராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை பெரும் முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 4 ஆண்டுகளும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.