யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் விளையாடாதது ஏன்? - தினேஷ் கார்த்திக் விளக்கம்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி ஏகப்பட்ட விமர்சனங்களையும் சந்தித்தது.
ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் இந்திய அணியானது இம்முறை கட்டாயம் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது மிகப்பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்திய அணி பெற்ற இந்த தோல்விக்கு அணியில் உள்ள வீரர்களை சரியாக தேர்ந்தெடுக்காததும், பிளேயிங் லெவனில் முறைப்படி வீரர்களை விளையாட வைக்காததுமே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்த தொடரில் ஒரு சில வீரர்களை எடுத்துவிட்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காததும் மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் ஒரு போட்டியில் கூட விளையாடாதது ஏன்? என்பது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவருக்குமே இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்திலேயே ஆடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும். அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என அனைவருமே அவர்கள் இருவரிடமும் இதுபற்றி தெளிவான விளக்கத்தையும் கொடுத்துவிட்டனர்.
மேலும் ஒருவேளை தேவைப்பட்டால் கண்டிஷனுக்கு ஏற்ப அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமே தவிர அதுதவிர்த்து பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று கூறிவிட்டனர். அதன் காரணமாகவே அவர்கள் இருவரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை” என்று தெரிவித்தார்.