தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்த நீங்கள் இவரை ஏன் தேர்வு செய்யவில்லை - பார்த்தீப் படேல் கேள்வி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சென்ற தினேஷ் கார்த்திக், சோதனை அடிப்படையில் முதலில் களமிறக்கப்பட்டார். சோதனையடிப்படையில் களமிறங்கப்பட்ட அவர், முதல் சில போட்டிகளிலேயே டெத் ஓவர்களில் அதிக ரன்களை குவித்து அசத்தினார். இதனால் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு, இறுதியில் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதினை வென்று அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய டி20 அணிகளிலும் இடம்பெற்று வருகிறார். இதனால், ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை, அக்டோபர் இறுதியில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ஐபிஎல் மூலம் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில் அதே ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளரை ஏன் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கவில்லை என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிதான். இவர் கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீசியபோது, இவரது பந்துகளை பாபர் ஆசாமும், முகமது ரிஸ்வானும் சேர்ந்து அடித்து நொறுக்கினார்கள். இதற்குப் பிறகு இவருக்கு டி20 அணியில் அவ்வளவாக இடம் கிடைக்கவில்லை.
இதனால், முகமது ஷமியின் டி20 கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில் ஐபிஎல் 15ஆவது சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு 6.25 கோடிக்கு ஏலம் போய் அதிரடியாக பந்துவீசி, மொத்தம் 16 போட்டிகளில் 20 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக, பேட்ஸ்மேன்களை கணித்து சரியான லைனில் பந்துவீசி அதிக ரன்களையும் கசியவிடாமல் இருந்தார். இருப்பினும், அதன்பிறகும் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை.
இப்படி சிறப்பாக செயல்பட்டவரை ஏன் சேர்க்கவில்லை என்றுதான் தற்போது பார்த்தீவ் படேல் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்டார் எனக் கருதிதான் தினேஷ் கார்த்திக்கை சேர்த்தீர்கள். அதே ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கை மட்டும் புறக்கணிப்பது சரியா? சிறப்பாக, துல்லியமாக பந்துவீசினார். இவரை மட்டுமல்ல ஹர்ஷல் படேலையும் புறக்கணிப்பது போல் தெரிகிறது” எனக் கூறினார்.