சதத்தை தவறவிட்டது வருத்தமாக தான் உள்ளது - ஷிகர் தவான்!

Updated: Sat, Jul 23 2022 12:07 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று ட்ரினிடாட் நகரில் துவங்கியது. அதன்படி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கலஸ் பூரான் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். 

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்களையும், துவக்க வீரர் கில் 64 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்களுக்கு சரியான போட்டியை அளித்து வந்தது. சமீப காலமாகவே 50 ஓவர்கள் போட்டிகளில் முழுவதுமாக பேட்டிங் செய்யாமல் ஆட்டம் இழந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை இந்திய அணியை எதிர்த்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்து இறுதியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் மிக நெருக்கமாக வந்து தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக கையில் மேயர்ஸ் 75 ரன்களையும், பிரண்டன் கிங் 54 ரன்களையும் குவித்தனர். ஒரு கட்டத்தில் இறுதி நேரத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருக்க கடைசி ஓவரில் எப்படியோ இந்திய அணி தட்டு தடுமாறி த்ரில் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து ஆட்டம் முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஆட்டநாயகனான ஷிகார் தவான் கூறுகையில், “இந்த போட்டியில் நான் சதத்தை தவறவிட்டது சற்று வருத்தம் தான். ஆனாலும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடியதாகவே நினைக்கிறேன். இறுதியில் இந்த ஆட்டத்தில் நல்ல ரன் குவிப்பை வழங்கி இருந்தோம்.

ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் இறுதி நேரத்தில் சற்று பயமும் இருந்தது. ஆனால் ஒரு வழியாக நாங்கள் இறுதியில் வெற்றியை பெற்று விட்டோம். கடைசி நேரத்தில் செய்த சின்ன சின்ன விஷயங்கள் வெற்றிக்கு மிகவும் உதவின. அதிலும் குறிப்பாக பீல்டிங்கை பைன் லெக்-க்கு மாற்றி அமைத்தது எங்களுக்கு மிகவும் உதவியது.

ஒவ்வொரு போட்டியில் இருந்தும் நாங்கள் ஒவ்வொரு விஷயங்களை கற்று வருகிறோம். அந்த வகையில் இந்த போட்டியில் கற்ற பாடங்களின் மூலம் இனிவரும் போட்டிகளில் இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை