ஷாஹீன் அஃப்ரிடியை குறைகூறுவது தவறு - முகமது அமீர்!
எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் பல்வேறு விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற்று முடிந்திருந்தாலும், அனைத்திற்கும் தலையாயதாக இருந்தது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிதான்.
கடைசி பந்து வரை சென்ற ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் செயல்பட்ட விதம் முற்றிலும் சரி இல்லை! பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் சரியில்லை! என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தனர்.
அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அமீர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் சாஹின் அஃப்ரிடி தனது இயல்பான ஃபார்மில் இல்லை. ஆகையால் அவரை பவர் பிளே ஓவர்களில் பயன்படுத்தியிருக்கக் கூடாது. மேலும் டெத் ஓவர்களிலும் அவரது செயல்பாடு சிறப்பானதாக இல்லை. இந்நிலையில் அவரை மிடில் ஓவர்களில் பயன்படுத்தியிருக்க வேண்டும். நிச்சயம் ஒரு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருப்பார்.
விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரில் ஒருவர் விக்கெட் விழுந்திருந்தால் ஆட்டம் மொத்தமாக பாகிஸ்தான் பக்கம் திரும்பியிருக்கும். முகமது நவாஸை கடைசிவரை வைத்திருக்காமல், பவர்-பிளே ஓவர் மற்றும் மிடில் ஓவர்களில் கொடுத்திருக்கலாம். கடைசியில் ஷாகின் ஷாவிற்கு ஒரு ஓவர் கொடுத்திருக்கலாம். 16 ரன்கள் விட்டுக் கொடுக்கும் அளவிற்கு அவர் மோசமாக வீசியிருக்க மாட்டார்.
இந்த இடத்தில் தான் பாபர் அசாம் சரியாக பவுலர்களை பயன்படுத்தவில்லை. 99 சதவீதம் ஆட்டத்தின் வெற்றி பாகிஸ்தான் பக்கமே இருந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டது. நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராவுப் இருவரும் சேர்ந்து 12 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். மூன்று ஓவர்களில் 48 ரன்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை ஹாரிஸ் ராவுப் வீசி 15 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் 18ஆவது ஓவரை அவருக்கு கொடுத்திருக்க வேண்டும். அப்போது இந்திய வீரர்கள் அடிப்பதற்கு துவங்கவில்லை. அந்த சமயம் ரன்களை கட்டுப்படுத்தி இருந்தால் இன்னும் அழுத்தம் அதிகரித்திருக்கும்.
ஒட்டுமொத்தமாக பந்துவீச்சாளர்கள் மீது குறை கூற முடியாது. அவர்களை பயன்படுத்திய விதம் தான் தவறாக முடிந்திருக்கிறது. இரண்டு அணிகளின் செயல்பாட்டை ஒப்பிடுகையில் பாகிஸ்தான் அணி தான் நன்றாக செயல்பட்டது. கடைசியில் நடந்த சில தவறுகளால் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.