நான் எப்படி தவறு செய்தேன் என தெரியவில்லை - நசீம் ஷா
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் அபுதாபி செல்லவுள்ளனர்.
இந்நிலையில், பிஎஸ்எல் தொடரின் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட நசீம் ஷா, நான் எப்படி இத்தவறை செய்தேன் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நசீம் ஷா,“நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். ஏனெனில் அதுதான் என்னுடை வாழ்க்கை. மேலும் எங்கள் அணி மூலம் எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் நான் பின்பற்றுகிறேன். அப்படி இருந்து நான் எப்படி இந்த குறிப்பிட்ட விதியை மீறினேன் என்பது தெரியவில்லை” என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிவரும் நசீம் ஷா, விதிமுறைகளை மீறியதாக தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பிஎஸ்எல் தொடரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.