SA vs IND: புஜாரா, ரஹானே குறித்து தினேஷ் கார்த்திக்கின் கருத்து!

Updated: Tue, Jan 04 2022 16:24 IST
‘Dravid Will Have to Make Harsh Decisions’: Dinesh Karthik (Image Source: Google)

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர்களாக, அனுபவம் வாய்ந்த புஜாராவும் ரஹானேவும் திகழ்ந்தனர். 3ஆம் வரிசையில் புஜாரா, 5ஆம் வரிசையில் ரஹானே என இந்திய பேட்டிங் ஆர்டரின்  முக்கியமான வீரர்கள் இவர்கள். 

ராகுல் டிராவிட்டுக்கு பிறகு டெஸ்ட் அணியில் அவர் விளையாடிவந்த 3ஆம் வரிசையை பிடித்த புஜாரா, 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6605 ரன்களை குவித்துள்ளார். ரஹானே 80 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4863 ரன்களை குவித்துள்ளார்.

இந்திய பேட்டிங் ஆர்டரின் தூண்களாக திகழ்ந்துவந்த புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக ஆடிவருகின்றனர். புஜாரா 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ரஹானேவும் படுமோசமாக ஆடிவருகிறார்.

ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் என வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், தொடர்ச்சியாக புஜாராவும் ரஹானேவும் சொதப்பினால் கூட, அவர்கள் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பு மற்றும் அவர்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அதை பயன்படுத்திக்கொள்வதில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரிலும் சொதப்பிவருகின்றனர். இந்திய அணியில் தங்களது இடத்தை தக்கவைக்க பெரிய இன்னிங்ஸ்கள் ஆடியாக வேண்டும் என்பதை அவர்களை உணர்ந்திருக்கின்றனர். ஆனாலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவரும் 2ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் புஜாரா 3 ரன்னிலும், ரஹானே ரன்னே அடிக்காமலும் வெளியேறினர்.

புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அவர்களது டெஸ்ட் கெரியரை காப்பாற்றிக்கொள்ள இந்த டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸ் தான் கடைசி வாய்ப்பு என்று கவாஸ்கர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், புஜாரா, ரஹானே குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், “டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட் அவரது கெரியரின் கடைசி கட்டத்தில் இருந்தபோது, அவரது 3ம் பேட்டிங் ஆர்டரை கைப்பற்றியவர் புஜாரா. ராகுல் டிராவிட்டின் கெரியர் அத்துடன் முடிந்தது. வாழ்க்கை ஒரு வட்டம். 

அன்றைக்கு ராகுல் டிராவிட்டின் கெரியரை முடித்துவைத்த புஜாராவின் கெரியர், இன்றைக்கு ராகுல் டிராவிட்டால் முடித்துவைக்கப்படவுள்ளது. ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரையும் நீக்கும் கடினமான முடிவை ராகுல் டிராவிட் எடுத்தாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை