ஐபிஎல் 2022: தொடர்ச்சியாக கேட்சுகளை தவறவிட்ட சிஎஸ்கே!

Updated: Tue, Apr 26 2022 14:00 IST
Dropping Catches-Fans Slam Yellow Brigade For 'Pakistan Level Fielding' (Image Source: Google)

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. சென்னை அணி இந்த போட்டியை 11 ரன்கள் வித்தியாசத்தில் நெருக்கமாக வந்து தோற்றிருக்கிறது. சேஸிங்கின் போது கடைசிக்கட்ட ஓவர்களில் தோனி, ஜடேஜா ஆகியோர் வெற்றிகரமாக ஆட்டத்தை ஃபினிஷ் செய்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. ஆனால், சென்னையின் தோல்விக்கு இந்த பேட்டிங் சொதப்பல்களை விட ஃபீல்டிங்கில் சென்னை கோட்டைவிட்டதுதான் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எப்படி?

போட்டி நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணிகளின் ஆவரேஜ் ஸ்கோர் 169 மட்டும்தான். ஆனால், நேற்று பஞ்சாப் 187 ரன்களை எடுத்திருந்தது. சராசரியை விட 18 ரன்கள் அதிகம். ஆக, ஜடேஜா சொன்னதைபோல தோல்விக்குக் காரணமான அதிகமாக வழங்கப்பட்ட அந்த 10-15 ரன்களுக்கு சொதப்பலான ஃபீல்டிங்குமே ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, கேட்ச் ட்ராப்கள். அந்த கேட்ச் ட்ராப்களால்தான் இந்த மேட்ச்சே ட்ராப் ஆனது.

பஞ்சாப் கிங்ஸ் எடுத்த 187 ரன்களில் பெரும்பாலான ரன்களை தவான்-பணுகா ராஜபக்சே கூட்டணிதான் எடுத்திருந்தது. இருவரும் இணைந்து 110 ரன்களை எடுத்திருந்தனர். இப்படி ஒரு பார்ட்னர்ஷிப் பஞ்சாபுக்கு இந்த சீசனில் இதுவரை அமைந்ததே இல்லை. முதல் முறையாக 100 ரன்களுக்கு மேல் ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள்.

கடந்த சில போட்டிகளில் பஞ்சாப் அணி மோசமாக தோற்றதற்கு இதே மாதிரியான பார்ட்னர்ஷிப்கள் அமையாதது மிக முக்கிய காரணமாக அமைந்தது. அந்த அணி இதற்கு முன் ஆடியிருக்கும் 7 போட்டிகளில் மொத்தமுள்ள 70 விக்கெட்டுகளில் 57 விக்கெட்டுகளை இழந்திருக்கின்றனர். மூன்று போட்டிகளில் மொத்தமாக ஆல் அவுட் ஆகியிருக்கின்றனர். அனைத்து போட்டிகளிலுமே குறைந்தபட்சமாக 5 விக்கெட்டுகளையாவது இழந்திருக்கின்றனர்.

இந்த சீசனில் மற்ற எந்த அணிகளும் இதுவரை இத்தனை அதிக விக்கெட்டுகளை விட்டு இவ்வளவு சொதப்பியதே இல்லை. அடித்தால் சிக்சர் இல்லையேல் அவுட் என்கிற தடாலடி மனப்பான்மையோடு அந்த அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஆடுவதாலயே அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. அதிகமாக சிக்சர்களையும் பவுண்டரிக்களையும் அடிப்பார்கள். ஆனால், பார்ட்னர்ஷிப்கள் என பெரிதாக எதுவும் உருவாகாது. 

இதுவரையிலான போட்டிகளில் 6 அரைசத பார்ட்னர்ஷிப்கள் மட்டுமே அமைத்திருக்கின்றனர். இந்த ஆறிலும் நான்கு தவான் அல்லது மயங்க் அகர்வால் அல்லது இருவருடைய பங்களிப்புடனேயே வந்தவை. தவான் அல்லது மயங்க் நின்று கூட்டணி அமைக்கவில்லையெனில் தொடர்ச்சியாக குறைவான ஸ்கோர்களையே எடுத்துக் கொண்டிருப்பர்.

இதனால்தான் தவான் + பணுகா ராஜபக்சா கூட்டணி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இருவரும் இணைந்து அணியின் 60% ரன்களை எடுத்திருக்கின்றனர். பெரும்பாலான ஓவர்களுக்கு விக்கெட்டை விடாமல் காத்து நின்றிருக்கின்றனர். இந்த போட்டியில் பஞ்சாப் மொத்தமே 4 விக்கெட்டுகளைத்தான் இழந்திருக்கிறது. இந்த சீசனில் இவ்வளவு குறைவாக பஞ்சாப் எந்த போட்டியிலும் விக்கெட்டுகளை விட்டதில்லை. 

குறைந்தபட்சமாக 5 விக்கெட்டுகளையாவது எல்லா போட்டிகளிலும் விட்டிருக்கின்றனர். இந்த பார்ட்னர்ஷிப் சீக்கிரமே உடைக்கப்பட்டிருந்தால் பஞ்சாபின் தடாலடி அணுகுமுறை மீண்டும் தலைதூக்கியிருக்கக்கூடும். அதன்மூலம், அடுத்தடுத்து விக்கெட்டுகளும் வீழ்ந்திருக்கக்கூடும். ஆனால், இந்த பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் சென்னை அணி கடுமையாக சொதப்பியது.

ஜடேஜா வீசிய 7 வது ஓவரில் பணுகா ராஜபக்சே ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்திருந்தார். ருத்துராஜ் அதை கோட்டைவிட்டிருந்தார். ராஜபக்சே அந்த சமயத்தில் வெறும் 1 ரன்னை மட்டுமே எடுத்திருந்தார். ஜடேஜா வீசிய 9 வது ஓவரில் மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பை ராஜபக்சே வழங்கினார். இந்த முறை சாண்ட்னர் அதை கோட்டைவிட அது சிக்சராகியிருந்தது. இந்த சமயத்தில்  ராஜபக்சே 6 ரன்களில்தான் இருந்தார். இந்த கேட்ச் ட்ராப்புகளுக்கு பிறகுதான் தவான் + ராஜபக்சே வெற்றிகரமான பார்ட்னர்ஷிப் துளிர்விட தொடங்கியது.

கேட்ச் ட்ராப்கள் இந்த சீசனில் சென்னை அணிக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. கடந்த போட்டியில் ஜடேஜா, ப்ராவோ எல்லாமே தொடர்ந்து கேட்ச்சை விட்டிருந்தார்கள். இந்த போட்டியில் அவர்கள் அந்த தவறை தொடராவிட்டாலும், வேறு வீரர்கள் அதே தவறை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கேட்ச்கள் ட்ராப்பாகிக் கொண்டேதான் இருக்கிறது. இந்த சீசனில் இதுவரை தோராயமாக 13 கேட்ச்களை சென்னை ட்ராப் செய்திருக்கக்கூடும். அதிகமாக கேட்ச்களை ட்ராப் செய்த அணிகளின் பட்டியலில் எப்படியும் முதலிடத்திற்கான ரேஸில் முன்னணியின் இருக்கும்.

வான்கடே மைதானத்தில் இதற்கு முன் கடைசியாக நடந்திருக்கும் 4 போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணிதான் வென்றிருக்கிறது. ஆனாலும், டாஸை வென்ற ஜடேஜா சேஸிங்கை தேர்வு செய்தார். இதுவுமே தவறான முடிவாக போனது. நம்பிக்கையோடு சேஸிங்கை தேர்வு செய்த ஜடேஜா தோனி அடிப்பார் என ஒரு முனையில் நின்று வேடிக்கை பார்த்திடாமல் தன் பங்குக்கும் கொஞ்சம் பேட்டை வீசியிருந்தால் கூட சென்னைக்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்கும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை