எஸ்ஆர்எச் பிளேயிங் லெவனிலிருந்து வார்னர் நீக்கப்பட்டதற்கான காரணத்தி கூறிய பிராட் ஹேடின்!
ஐபிஎல் 2021 தொடரின் போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வார்னர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் ஆடும் 11 வீரர்கள் அணி பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார். வார்னர் ‘அவுட் ஆஃப் ஃபார்ம்’ ஆகிவிட்டார். அவரால் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்ட முடியவில்லை என்று எல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
அத்தனை விமர்சனங்களையும் மீறி துபாயில் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையைக் கைபற்றித் தர உதவினார் வார்னர். வார்னரின் டி20 உலகக்கோப்பை ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் பலரும் வார்னர் தனது அதிரடிக்குத் திரும்பிவிட்டார் என்றே புகழ்ந்து வருகின்றனர்.
இதன் மூலம் 2022 ஐபிஎல் போட்டிகளில் பல அணிகளும் வார்னரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ள முன் வருவர் என்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 2021 ஐபிஎல் போட்டிகளின் போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டதன் காரணம் குறித்து அந்த அணியின் துணை பயிற்சியாளர் பிராட் ஹேடின் பேசியுள்ளார்.
ஹேடின் கூறுகையில், “வார்னர் ‘ஆவுட் ஆஃப் ஃபார்ம்’ ஆகிவிட்டார் என்ற காரணத்துக்காக அவரை அணியில் இருந்து நீக்கவில்லை. வார்னருக்கு ஆட்டத்தில் பங்கேற்ற பயிற்சி இல்லாமல் தான் போய்விட்டது. ஆஸ்திரேலியா அணி வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக மோதிய போது வார்னர் அந்த அணியில் இடம் பெறவில்லை. இதனால் அவருக்கு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுவதற்கான பயிற்சி இல்லாமல் போய்விட்டது.
Also Read: T20 World Cup 2021
ஆனால், அவர் நெட் பயிற்சியின் போது எல்லாம் சிறப்பாகவே விளையாடினார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னர் விளையாடமல் போனதற்கு அவரது ஃபார்ம் காரணம் இல்லை. அவருக்குப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி ரொம்ப நாளாகி இருந்தது. அதனால் அவருக்கு போட்டிகள் கலந்து ஆடும் அனுபவம் மீண்டும் தேவைப்பட்டது. மீண்டும் தனது பாதையில் அவர் பயணிக்க பயிற்சிகளை விட போட்டிகள் தான் உதவும்” என தெரிவித்தார்.