இலக்கை எட்ட கடைசி வரை போராடியது மகிழ்ச்சி - ஃபாஃப் டு பிளெசிஸ்!

Updated: Tue, Apr 16 2024 12:47 IST
இலக்கை எட்ட கடைசி வரை போராடியது மகிழ்ச்சி - ஃபாஃப் டு பிளெசிஸ்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரசிகர்களுக்கு ராஜவிருந்து என்றே தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவுசெய்தது. 

அதன்படி இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், அபிஷேக் சர்மா 34 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 32 ரன்களையும் என களமிறங்கிய அனைத்து வீரர்களும் சுமார் 150 ஸ்டிரைக் ரேட்டிற்கு மேல் விளாசி தள்ளினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் விராட் கோலி 42 ரன்களுக்கும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 62 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் இறுதிவரை போராடி 5 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்காத காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “இதுபோன்ற டி20 பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன். அதிலும் 280 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட நாங்கள் கடைசி வரை போராடினோம். மேலும் அது மிகவும் கடினமும் கூட. இந்த போட்டியில் நாங்கள் சில விஷயங்களை முயற்சித்தோம். ஆனால் இந்த விளையாட்டைப் பொறுத்தவரையில் உங்களது தன்னம்பிக்கை குறைவாக  இருப்பதை மறைக்க முடியாது.

இந்த போட்டியில் எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் பேட்டிங்கிலும் நாங்கள் ஒருசில மாற்றங்களை செய்ய வேண்டும். ஏனெனில் நாங்கள் பவர்பிளேவுக்கு பிறகும் எங்களது ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய போட்டியில் எங்கள் அணி வீரர்கள் ஒருபோதும் மனம் தளராமல் இலக்கை விரட்டுவதில் குறியாக இருந்தனர். அவர்கள் இப்போட்டி விளையாடுவதை பார்பர்தற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் பந்துவீச்சில் நாங்கள் 30, 40 ரன்களை கூடுதலாக கொடுத்ததே தோல்விக்கு காரணமாக மாறிவிட்டது.

இப்போட்டிக்கு பின் நாங்கள் மன சோர்வை நீக்கி மீண்டும் நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும். சில நேரங்களில் உங்களால் இதுபோன்ற தோல்வியிலிருந்து மீண்டு வருவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இதனால் நீங்கள் மீண்டும் விளையாட வரும்போது உங்களது முழு அர்ப்பணிப்பைக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை