அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி? 

Updated: Tue, Nov 23 2021 21:42 IST
Image Source: Google

ஐசிசி நடத்தும் தொடர் என ஒன்று நடைபெற்றாலே, அதில் அனைவரின் கவனமும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனவா என்று தான் இருக்கும். பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்க்க கூட்ட அழைமோதும்.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியான பிரச்னைகள் நடைபெற்று வருவதால் கிரிக்கெட் போட்டிகளும் இரு அணிகளுக்கு இடையே நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் பெரும் தொடர்களில் மட்டும் தான் மோதிக்கொள்கின்றன. அதிலும் இந்தியாவின் கையே ஓங்கி இருக்கும். ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்து அதனை மாற்றி அமைத்தது.

இந்த போட்டி உலக அளவில் பெரும் ஈர்ப்பை பெற்றிருந்தது என்றே கூறலாம். இந்தாண்டு இரு அணிகளும் மோதிய போட்டி தான், இதுவரை கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரசிகர்களால் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கப்பட்டது என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே தனிப்பட்ட போட்டி தொடரை ஏற்பாடு செய்ய அமீரக வாரியம் முன்னெடுப்பு எடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய துபாய் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் அப்துல் ரகுமான், “கடந்த காலங்களில் சார்ஜா மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. அவை ஒரு போரை போன்று சுவாரஸ்யமாக இருக்கும்.

எனவே நாங்கள் அதனை மெய்ப்பிக்க விரும்புகிறோம். ஓராண்டுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அமீரகத்தில் மோதிக்கொண்டால் சிறப்பாக இருக்கும். அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். ஒருவேளை இரு அணிகளும் ஒப்புக்கொண்டால் துபாய் மைதானத்தை எப்போது வேண்டுமானாலும் வழங்க தயாராக இருக்கிறோம்” எனக்கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக அமீரக மைதானங்கள் பெரும் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறது. பாகிஸ்தான் பிரீமியர் லீக், ஐபிஎல் தொடர் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் ஆகியவை எந்தவித தடையும் இன்றி அமீரகத்தில் நடந்து முடிந்தது. எனவே இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஐசிசி அங்கு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை