இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய துனித் வெல்லாலகே!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
அதன்படி இப்போடியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 98 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும் குவித்தததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி பேட்டர்கள் சோபிக்க தவறினர்.
இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டியதால் 138 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை துனித் வெல்லாலகே படைத்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக வெல்லாலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு இப்போட்டியில் இந்திய அணி தங்களது 9 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி இத்தொடர் முழுவதும் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு போட்டியிலும் தலா 9 விக்கெட்டுகளை இழந்து மோசாமான சாதனையை பட்டியலில் இராண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 10 விக்கெட்டுகளையும் சுழறபந்துவீச்சாளர்களிடம் இழந்ததே அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேற்கொண்டு இவை அனைத்து இலங்கை அணிக்கு எதிராக மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஒருநாள் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்தியா அதிக விக்கெட்டுகளை இழந்தது
- 10 விக்கெட்டுகள் vs இலங்கை, ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு, 2023
- 9 விக்கெட்டுகள் vs இலங்கை, ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு, 1997
- 9 விக்கெட்டுகள் vs இலங்கை, ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு, 2024 (முதல் ஒருநாள்)*
- 9 விக்கெட்டுகள் vs இலங்கை, ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு, 2024 (2ஆவது ஒருநாள்)*
- 9 விக்கெட்டுகள் vs இலங்கை, ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு, 2024 (3ஆவது ஒருநாள்)*