SA20 League: டி காக், பிரீட்ஸ்கி அதிரடி; டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Fri, Feb 03 2023 11:13 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் இரண்டாம் பாதிக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய எம்ஐ அணிக்கு டெவால்ட் பிரீவிஸ் - கிராண்ட் ரோலோஃப்சென் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 10 ரன்களில் ரோலோஃப்சென் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 13 ரன்களில் பிரீவிஸும், 5 ரன்களில் ஜார்ஜ் லிண்டேவும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் - டிம் டேவிட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வெண்டர் டுசென் 43 ரன்களிலும், டிம் டேவிட் 33 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து களமிறங்கிய ஓடியன் ஸ்மித் - டெலானோ பொட்ஜீட்டர் இணை ஒருசில பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிலும் பொட்ஜீட்டர் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் எம்ஐ கேப்டவுன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பொட்ஜீட்டர் 17 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரிகள் என 33 ரன்களையும், ஓடியன் ஸ்மித் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களையும் சேர்த்தனர். டர்பர்ன் அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் பென் மெக்டர்மோட் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் - மேத்யூ பிரீட்ஸ்கி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய டி காக் அரைசதம் கடந்து அசத்தினார்.

அதன்பின் 63 ரன்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக் ஆட்டமிழக்க, அடுத்து வந்து அதிரடி காட்டிய கீமா பால் 31 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 0, வியான் முல்டர் 7 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரீஸ்ட்கீ 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை