எமீரேட்ஸ் டி20 லீக்: புதிய அணிகளை வாங்கிய கேகேஆர், மும்பை இந்தியன்ஸ்!
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் பெரிதளவில் இருந்ததால், ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், 14ஆவது சீசனின் இரண்டாவது பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடத்தப்பட்டது.
மேலும் உலகின் பணக்கார கிரிக்கெட் தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரை பின்பற்றி கரீபியன் பிரீமியர் லீக் தொடர், வங்கதேசம் சூப்பர் லீக், பாகிஸ்தான் பிரீமியர் லீக் போன்ற தொடர்கள் நடத்தி, வெற்றியும் கண்டு வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாக வைத்து எமீரேட்ஸ் பிரீமியர் லீக் தொடர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஐசிசியும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளது.
அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றதால், அந்த பரிச்சயத்தில் இந்த புதிய 6 அணிகளை வாங்க, ஐபிஎல் அணிகளுக்கு அமீரக கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. இதனையேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் அந்த ஏலத்தில் பங்கேற்று, புதிய இரண்டு அணிகளை வாங்கியுள்ளது. மும்பை வாங்கியுள்ள அணியின் பெயருக்கு பின்னால், இந்தியன்ஸ் என்ற பெயர் சேர்க்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஏற்கனவே கரீமியன் பிரீமியர் லீக் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வாங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தற்போது, அமீரகத்தில் நடைபெறவுள்ள பிரீமியர் லீக் தொடரிலும் ஒரு அணியை வாங்கியுள்ளது.
அதேசமயம், அமீரக கிரிக்கெட் வாரியம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கும் அழைப்பு விடுத்தது. இந்த ஏலத்தில் பங்கேற்க சிஎஸ்கே முதலில் ஒத்துக்கொண்ட நிலையில், இறுதியில் பின்வாங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: T20 World Cup 2021
மேலும் இந்திய அணி வீரர்கள் வேறு நாட்டில் நடைபெறும் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க தடை இருக்கிறது. இருப்பினும், கரோனா போன்ற இக்கட்டான நிலையிலும், ஐபிஎல் நடத்த அமீரகம் இடம் கொடுத்ததால், அந்த நல்லுறவின் அடிப்படையில் இந்திய வீரர்களை, இந்த தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.