ENG vs IND, 2nd Test Day 4: தடுமாறிய இந்தியா; கைகொடுத்த புஜாரா, ரஹானே!

Updated: Sun, Aug 15 2021 22:57 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 391 ரன்கள் விளாசியது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனதும் நேற்றைய 3ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.

கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கே.எல். ராகுல் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

அடுத்து வந்த புஜாரா நிதானமாக விளையாட, ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால், ஹூக் ஷாட் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து 21 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதனால் இந்தியா 27 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க வீரர்களை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடினார். ஆனால், 20 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கர்ரன் பந்தில் வெளியேறினார். அப்போது இந்தியா 55 ரன்கள் எடுத்திருந்தது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த புஜாரா - ரஹானே இணை இங்கிலாந்து அணி பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டது. இதில் ரஹானே அரைசதம் கடந்து சாத்தினார். ஆனால் மறுமுனையில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து ரஹானேவும் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 14 ரன்களுடனும், இஷாந்த் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 154 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை