ENG vs IND 2nd Test, Day 1 : சதமடித்து மிரட்டிய ராகுல்; வலுவான நிலையில் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்ட ஜோ ரூட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 83 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாராவும் 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - ராகுல் இணை எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளாக விரட்டியது. இதில் கே.எல்.ராகுல் தனது 6ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேலும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சதமடித்த 10ஆவது வீரர் என்ற பெருமையையும் ராகுல் பெற்றார். அதன்பின் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 276 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் கே.எல். ராகுல் 127 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், ஒல்லி ராபின்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.