ENG vs IND : இரண்டாவது டெஸ்டிலும் அஸ்வின் விளையாடுவது சந்தேகம்?
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய ஆணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டிருந்தார். அவருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஜடேஜா முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்து, இந்திய அணியை 95 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன் என்ற விவாதம் இன்னும் ஓயாமல் நீடித்து வருகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து களத்தில் கூட அஸ்வின் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். ஆனால் விராட் கோலி அவரை ஓரம்கட்டியது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு இடம் கிடைப்பதும் சந்தேகமே என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை வழங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியில் இருந்ததை விட 2ஆவது டெஸ்டில் அதிக புற்களை கொண்டு பிட்ச் ரெடியாகி வருகிறது. புற்கள் அதிகமாக இருந்தால், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும்.
எனவே 2ஆவது டெஸ்டில் இன்னும் ஒரு சீனியர் வேகப்பந்துவீச்சாளரையும் வைத்துக்கொண்டு இந்திய அணி களமிறங்கவுள்ளது. கடந்த போட்டியில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் சிறப்பாக வீசியிருந்தனர். 2ஆவது போட்டியில் சர்துல் தாக்கூருக்கு பதிலாக இஷாந்த் சர்மா களமிறங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே பேட்டிங்கை மனதில் வைத்தும் ஜடேஜாவுக்கே வாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
இதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் அணியில் இடம்பெறமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.