ENG vs IND, 3rd T20I: சூர்யகுமார் சதம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

Updated: Sun, Jul 10 2022 22:48 IST
Suryakumar hundred in vain; England defeated India! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், 3ஆவது டி20 போட்டி இன்று டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலிரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார் பட்லர். ஆனால் அந்த 2 போட்டிகளிலும் படுதோல்வியை தழுவியதால், இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் மந்தமாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 27 ரன் மட்டுமே அடித்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஜோஸ் பட்லர் 9 பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஃபிலிப் சால்ட் வெறும் 8 ரன்னுக்கு நடையை கட்டினார். ஆனால் அடித்து ஆடி அரைசதம் அடித்த டேவிட் மலான் 39 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 29 பந்தில் 42 ரன்கள் அடித்தார். 

ஹாரி ப்ரூக் 9 பந்தில் 19 ரன்களும், கிறிஸ் ஜோர்டான் 3 பந்தில் 11 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 215 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 216 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியில் ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதமடிக்க, மறுமுனையிலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை விளாசி அசத்தினார். மேலும் இந்திய அணி தரப்பில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய 5ஆவது வீரர் எனும் பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றார்.

ஆனால் மறுமுனையில் தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் மறுமுனையில் மனம் தளராமல் விளையாடிய சூர்யகுமார் யாதவ் பவுண்டரியும், சிக்சருமாக விளாசி அசத்தினார். 

அதன்பின் 55 பந்துகளில் 6 சிக்சர், 14 பவுண்டரிகளை விளாசி 117 ரன்களை எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ், மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

ஆனாலும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை