ENG vs NZ, 1st ODI: பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் அதிரடி; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு தலா 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் நடைபெறவுள்ளன. அதன்படி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிக்களுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி கார்டிஃபில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஹாரி ப்ரூக் - டேவிட் மாலன் இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய டேவிட் மாலன் அரைசதம் அடைத்த கையோடு 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஹாரி ப்ரூக் 25 ரன்களிலும், ஜோ ரூட் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை அதிரடியாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் ஓய்வு முடிவை திரும்ப பெற்று தனது கம்பேக் போட்டியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லரும் அரைசதம் கடந்தார்.
பின் 52 ரன்களில் பென் ஸ்டோக்ஸும், 72 ரன்களில் ஜோஸ் பட்லரும் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதிடில் டேவிட் வில்லி தனது பங்கிற்கு 21 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங் கொடுத்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.