ENG vs NZ 1st test: டோமினிக் சிப்லியின் தடுப்பாட்டத்தால் டிராவில் முடிந்த ஆட்டம்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 2ஆம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் அறிமுக வீரர் டேவன் கான்வே இரட்டைச் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக டேவன் கான்வே 200 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் டோமினிக் சிப்லி, ஜோ ரூட், ஜாக் கிரௌலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடி காட்டிய ரோரி பர்ன்ஸ் 132 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இருப்பினும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் 103 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி கடைசி நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 273 ரன்களையும் இழக்காக நிர்ணயித்தது.
கடைசி நாளான இன்று 74 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ் - டோமினிக் சிப்லி இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ரோரி பர்ன்ஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஜாக் கிரௌலி 2 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் டோமினிக் சிப்லி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அவரைத் தொடர்ந்து ஆட்டத்தை போக்கை உணர்ந்த கேப்டன் ஜோ ரூட் போட்டியை டிரா செய்யும் முனைப்பில் கட்டையைப் போட்டார். இதனால் இப்போட்டி டிராவை நோக்கி சென்றது. பின்னர் 40 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோமினிக் சிப்லி 161 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இதன் மூலம் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.