ENG vs NZ, 3rd ODI: பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்து 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. இதையடுத்து நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் 3ஆவது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஜானி பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 4 ரன்களிலும் என டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த டேவிட் மாலன் - பென் ஸ்டோக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 96 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதற்கிடையில் கேப்டன் ஜோஸ் பட்லர் 38 ரன்களுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழ்ழக்க, இரட்டை சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 124 பந்துகளில் 15 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 182 ரன்களைச் சேர்த்து விக்க்ட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்காமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், பென் லிஸ்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 9 ரன்களிலும், வில் யங் 12 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 4 ரன்களிலும், டேரில் மிட்செல் 17 ரன்களிலும், டாம் லேதம் 3 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய கிள்ன் பிலீப்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயத்தினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலீப்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 72 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், லோக்கி ஃபர்குசன் போன்றோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டொன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரீஸ் டாப்லி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வுசெய்யப்பட்டார்.