ENG vs NZ, 3rd T20I: இங்கிலாந்தை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!

Updated: Sun, Sep 03 2023 22:28 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இதையடுத்து இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஒருபக்கம் ஃபின் ஆலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் டெவான் கான்வே 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். பின் ஆலனுடன் இணைந்த கிளென் பிலீப்ஸும் தனது அதிரடியை ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபின் ஆலன் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலீப்ஸ் தனது 9ஆவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் லிவிங்ஸ்டோன் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி அமர்களப்படுத்திய கிளென் பிலீப்ஸ் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 69 ரன்களை விளாசி கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும், லுக் வுட், லியாம் லிவிங்ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் 12 ரன்களுக்கும், வில் ஜேக்ஸ் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மாலன், ஹாரி ப்ரூக் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் - மொயீன் அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 40 ரன்களுக்கும், மொயீன் அலி 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டன், லுக் வுட் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதனால் இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கைல் ஜேமிசன், இஷ் சோதி தலா 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் நீடிக்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை