ENG vs NZ, 3rd Test: பேர்ஸ்டோவ் சதத்தால் தப்பிய இங்கிலாந்து!

Updated: Sat, Jun 25 2022 12:11 IST
Image Source: Google

நியூசிலாந்து வீரர்கள் ஆக்கோரஷமாக பந்துவீசிய போதும் தனி ஆளாக நின்று ஜானி பேர்ஸ்டோவ் சதம் விளாசி இருக்கிறார். இங்கிலாந்து அணி தடுமாறிய போது எல்லாம் கேப்டன் போல அணியை கரை சேர்த்துள்ளார்.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் டிரெண்ட் பவுல்ட், தனது அனல் பறக்கும் பந்துவீச்சை வீச, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அதனை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 

இதனையடுத்து 55 ரன்கள் சேர்ப்பதற்குள் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்தது. இதில் 12ஆவது ஓவரில் வாக்னர் வீசிய போது 2 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின் தடுமாறிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் தனி ஆளாக நின்று அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். மளமளவென பவுண்டரிகளை  அடிக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. பேர்ஸ்டோவுக்கு இங்கிலாந்து பவுலர் ஓவர்டன் நன்கு கம்பெனி கொடுக்க, இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். 

இதன்மூலம் 92 பந்துகளில் சதம் விளாசிய பேர்ஸ்டோவ், ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் எடுத்தார். இதில் 21 பவுண்டரிகள் அடங்கும். 55 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற ஸ்கோரில் தடுமாறிய இங்கிலாந்து அணி பேர்ஸ்டோவின் அதிரடியால் 264 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளது. 

இது நியூசிலாந்து அணியின் ஸ்கோரை விட 65 ரன்களே குறைவாகும். பேர்ஸ்டோவ் 2022ஆம் ஆண்டு மட்டும் 4 சதம் விளாசியுள்ளார். நான்கு சதத்தையும் , இங்கிலாந்து அணி தடுமாறிய போது தான்  விளாசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்த போதும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்த போதும், நியூசிலாந்துக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்த போதும், தற்போது 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறிய போதும், பேர்ஸ்டோவ் சதம் விளாசி அணியை காப்பாற்றி இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை