ரோஹித்துடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது - ஜானி பேர்ஸ்டோவ்!
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று முல்லன்பூரில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை வீழ்த்து இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அதிலும் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் தனது முதல் போட்டியிலேயே 22 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் தங்களுடைய அதிகபட்ச ரன்களையும் பதிவுசெய்து அசத்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளமாகவும் இது அமைந்தது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஜானி பேர்ஸ்டோவ், "ரோஹித் சர்மாவிடம் நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் இப்போது 7,000 ஐபிஎல் ரன்களை எட்டியுள்ளார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவருக்கு ஏராளமான அனுபவம் உள்ளது, இதுவரை விளையாடிய பந்து வீச்சாளர்களில் அவர் சிறந்தவர். அவருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும் நாங்கள் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்து ஒரு பார்ட்னர்ஷிப் பெற்று நல்ல தொடக்கத்திற்கு வழிவகுத்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது, மேலும் அது ஒட்டுமொத்த அணிக்கும் தேவையான அடித்தளமாக அமைந்தது. அதேபோல் நீங்கள் யாராக இருந்தாலும், எந்த விளையாட்டிலும் விளையாடும்போது, எப்போதும் பதட்டங்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன், அதுதான் அதன் அழகும் கூட. அதனால் தான் இதுபோன்ற பதட்டங்கள் நிறைந்த போட்டிகளில் விளையாடுவதை மிகவும் ரசிக்கிறேன்” என்று கூறினார்.
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் விளையாடி வருவதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டிகளில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஜானி பேர்ஸ்டோவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.6 கோடிக்கு தற்காலிக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது.
Also Read: LIVE Cricket Score
தற்போது 35 வயதான ஜானி பேர்ஸ்டோவ் இதுவரை ஐபிஎல் தொடரில் 50 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் என 1589 ரன்களை எடுத்துள்ளார். மேலும் டாப் ஆர்டர் வீரரான இவர் இங்கிலாந்து அணிக்காகவும் 100 டெஸ்ட், 107 ஒருநாள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடி 10ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.