ஐபிஎல் 2025: ஜேக்ஸ், ரிக்கெல்டன், போஷ்கிற்கு பதிலாக மாற்று வீரர்களை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் தொடங்கிவுள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இதில் எந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ற வகையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும்.
இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ் ஆகியோர் சர்வதேச போட்டிகள் காரணமாக பிளே ஆஃப் சுற்றில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வில் ஜேக்ஸும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் மற்றும் கர்பீன் போஷ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளதன் காரணமாக அவர்கள் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகளில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி வில் ஜேக்ஸிற்கு பதிலாக இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவும், ரியான் ரிக்கெல்டனிற்கு பதிலாக இங்கிலாந்தின் ரிச்சர்ட் கிளீசனும், கார்பின் போஷ்கிற்கு பதிலாக இலங்கை அணியின் சரித் அசலங்காவையும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் ஜானி பேர்ஸ்டோவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.5.25 கோடிக்கும், ரிச்சர்ட் கிளீசனை ரூ.1 கோடிக்கும், சரித் அசலங்காவை ரூ.75 லட்சத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 12 போட்டிகளில் 7 வெற்றி 5 தோல்விகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதுபோன்ற சூழ்நிலையில் பேர்ஸ்டோவ், அசலங்கா, கிளீசன் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.