ENG vs PAK, 2nd T20I: தோல்விக்கு பழி தீர்த்த இங்கிலாந்து!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 59 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 38 ரன்களையும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஹஸ்னைன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், சோயப் மக்சூத், முகமது ஹபீஸ், ஃபகர் ஸமான், அசாம் கான் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்ற மளித்தனர்.
மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வானும் 37 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. இருப்பினும் 8ஆவது வீரராக களமிறங்கிய சதாப் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து 36 ரன்களைச் சேர்த்தார்.
ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டும் தான் எடுக்க முடிந்தது. இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.