ENG vs PAK, 3rd ODI: சதமடித்து மிரட்டிய பாபர்; கடின இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பர்மிங்ஹாமில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்திருந்தார்.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸ்மான் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் - கேப்டன் பாபர் அசாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 56 ரன்கள் எடுத்திருந்த இமாம் உல் ஹக் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 14ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
அவருடன் இணைந்த முகமது ரிஸ்வானும் தனது பங்கிற்கு அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர் அபாரமாக விளையாடி வந்த பாபர் அசாம் 150 ரன்களை கடந்தார்.
இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக பாபர் அசாம் 158 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 5 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 3 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.