ENG vs PAK, 3rd ODI: வின்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம் உல் அக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு 331 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 158 ரன்களையும், ரிஸ்வான் 74 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 5 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன்ன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து பிலிப் சால்ட் 37 ரன்னிலும், ஸாக் கிரௌலி 39 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் - லீவிஸ் கிரிகோரி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இதில் ஜேம்ஸ் வின்ஸ் தனது முதல் சர்வதேச சத்தையும், கிரிகோரி முதல் அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினர்.
இறுதியாக 48 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து 102 ரன்களைச் சேர்த்த ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகனாகவும், சாகிப் மஹ்மூத் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.