ENG vs SA, 1st Test: தொடர் மழை காரணமாக பாதியிலேயே தடைப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி 9, அலெக்ஸ் லீஸ் 5 ரன்களிலும் ரபாடாவிடம் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் கடந்த சில போட்டிகளாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 8 ரன்களில் மார்கோ ஜான்சனிடம் விக்கெட்டை இழக்க, ஜானி பேர்ஸ்டோவ் ரன் ஏதுமின்றியும், பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களிலும், பென் ஃபோக்ஸ் 6 ரன்களிலும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆனாலும் மூன்றாம் விக்கெட்டாக களமிறங்கிய ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அதன்பின் ஆட்டத்தில்ல் 32 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை நீடித்தது மட்டுமின்றி, நாள் முழுவதும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக டெல்ஃபோர்ட்டிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஒல்லி போப் 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.