ENG vs SA, 1st Test: இங்கிலாந்தை 165-ல் சுருட்டிய தென் ஆப்பிரிக்கா!

Updated: Thu, Aug 18 2022 17:59 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. லண்டன் லார்ட்ஸில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ்5, ஜாக் க்ராவ்லி 9 ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 

சீனியர் வீரர் ஜோ ரூட் 8, ஜானி பேர்ஸ்டோவ் 0, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20,  பென் ஃபோக்ஸ் 6 ஆகியோரும்  சொதப்பினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து விளையாடிய ஒல்லி போப் அரைசதம் அடித்தார்.

31.4 ஓவரில் 116 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. 32 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டம் 32 ஓவருடன் முடிக்கப்பட்டது. 32 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 

61 ரன்களுடன் களத்தில் இருந்த ஒல்லி போப் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் 2ஆவது நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் ஒல்லி  போப் 73 ரன்களுக்கு  ரபாடாவின் பந்தில் போல்டாகி வெளியேற, அதன்பின்னர் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய இருவரையும் ரபாடா வீழ்த்தினார். இதனால் 165 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.

தென் ஆப்பிரிக்க அணியில் அபாரமாக பந்துவீசிய ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நோர்க்யா 3 விக்கெட்டுகளும், மர்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டீன் எல்கர் - சரெல் எரிவீ இணை பொறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை