ENG vs SA, 1st Test: இங்கிலாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது தென் ஆப்பிரிக்கா!

Updated: Fri, Aug 19 2022 22:04 IST
ENG vs SA, 1st Test: South Africa rout England by innings and 12 runs (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் தேதி லண்டன் லார்ட்ஸில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஒல்லி போப்பை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஒல்லொ போப் 73 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடாமல் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளும், நோர்க்யா 3 விக்கெட்டுகளும், மார்கோ யான்சென் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் இங்கிலாந்து அணியின் பவுலிங்கை கவனமுடன் எதிர்கொண்டு சிறப்பாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர்கள் எல்கர் - எர்வீ இணைந்து முதல் விக்கெட்டுக்கு 85 ரன்களை குவித்தனர். எல்கர் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபாரமாக பேட்டிங் ஆடிய எர்வீ 73 ரன்களை குவித்தார்.

மார்கோ யான்சென் (48), மஹராஜ் (41), நோர்க்யா(28) ஆகிய பவுலர்களும் நல்ல பங்களிப்பை செய்ய, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 161 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் 161 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள், இந்த இன்னிங்ஸிலும் படுமட்டமாக பேட்டிங் ஆடினர். தென் ஆப்பிரிக்க அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இந்த இன்னிங்ஸிலும் விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். 

தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் 35 ரன்களும், ஜாக் கிரௌலி 13 ரன்களும் அடித்தனர். ஜானி பேர்ஸ்டோவ் 18 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களும், ஸ்டூவர்ட் பிராட் 35 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 2ஆவது இன்னிங்ஸில் வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், ரபாடா, மஹாராஜ், ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை