ENG vs SA, 3rd T20I: ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம் காட்டடி; இங்கிலாந்துக்கு 192  டர்கெட்!

Updated: Sun, Jul 31 2022 20:59 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்திருந்தது.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சௌத்தாம்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் - ரிலே ரொஸ்ஸோவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடிய ஹெண்ட்ரிக்ஸ் அரைசதம் கடந்த நிலையில், மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரொஸ்ஸோவ் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் 70 ரன்களைச் சேர்த்திருந்த ஹெண்ட்ரிக்ஸும் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் வழக்கம்போல் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். அவருக்கு உறுதுணையாக கேப்டன் டேவிட் மில்லரும் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

அதன்பின் 22 ரன்களில் டேவிட் மில்லர் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனாலும் அடுத்த களமிறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி மிரட்டினார். அதன்பின் இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவரும் விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஐடன் மார்க்ரம் 51 ரன்களைச் சேர்த்திருந்தார். இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை