ENG vs SA, 1st ODI: மார்க்ரம், மஹாராஜ் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேசவ் மஹாராஜ் 4 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி லீட்சில் உள்ள ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேமி ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 10 பவுண்டரிகளுடன் 54 ரன்களை எடுத்த கையோடு ஜேமி ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 24.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 4 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் அதிரடியான தொடக்கத்தை வழங்கியதுடன், 24 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார். அவருக்கு துணையாக ரியான் ரிக்கெல்டனும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தென் ஆப்பிரிக்க அணியும் இமாலய வெற்றியை நோக்கி சென்றது. அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 86 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமாவும் 6 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் நடையைக் கட்டினார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் ரிக்கெல்டன் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.