ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான விருதை வென்ற ஐடன் மார்க்ரம் & ஹீலி மேத்யூஸ்!

Updated: Mon, Jul 14 2025 15:20 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதில் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஐடன் மார்க்ரம் மற்றும் காகிசோ ரபாடா ஆகியோரும், வங்கதேச டெஸ்ட் தொடரை இலங்கை அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பதும் நிஷங்கா ஆகியோரது பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை தென் ஆப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் வென்றுள்ளார். இதில் ஐடன் மார்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது இன்னிங்ஸில் 136 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அவர் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல் மகளிருக்கான பரிந்துரை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹீலி மேத்யூஸ் மற்றும் அஃபி ஃபிளெட்சர் ஆகியோரும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்தனர். இதில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் ஜூன் மதத்தின் சிறந்த வீராங்கனை விருதை வென்றார்.

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி மேத்யூஸ் அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். மேலும் டி20 தொடரில் பேட்டிங்கில் 147 ரன்களையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி விருதுகளை வென்றதன் மூலம் அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இது அவருடைய 4ஆவது ஐசிசி சிறந்த வீராங்கனை விருது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை