ENG vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்கா 326-ல் ஆல் அவுட்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து!

Updated: Fri, Aug 19 2022 18:03 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது . இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களைத் தடுமாறச் செய்தார்கள். போப் மட்டும் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். 

மழை காரணமாக முதல் நாளன்று 32 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் நோர்கியா 3 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெட்டுகளும் யான்சென் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால் இங்கிலாந்து அணி, 45 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போப் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் போல்ட் ஆனார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களில் ரபாடா 5 விக்கெட்டுகளும் நோர்கியா 3 விக்கெட்டுகளும் யான்சென் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு எல்கரும் எர்வீயும் 85 ரன்கள் சேர்த்தார்கள். எர்வீ 73 ரன்களிலும் எல்கர் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். மஹாராஜ் 41 ரன்களும் மார்கோ யான்சென் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்து அணிக்குக் கூடுதல் ரன்கள் சேர்த்தார்கள். 

இதனால் 2ஆம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. 3 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 124 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து 161 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே ஸாக் கிரௌலி 13 ரன்களிலும், ஒல்லி போப் 5 ரன்களிலும் கேசவ் மஹாராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அலெக்ஸ் லீஸ் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை