ENG vs SL, 2nd T20: இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி 20 போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி ஏற்கெனவே இத்தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கார்டிஃப்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 39 ரன்னும், குசால் பெராரா 21 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட், ஆதில் ராஷித் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஈயன் மோர்கன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் சாம் பில்லிங்ஸ் - லிவிங்ஸ்டோன் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாக்குப்பிடித்து நின்றனர். மேலும் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால்டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 18 ஓவரில் 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், 16.1 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது.