பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து!
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து, அதிகபடியான டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதிலும் கடந்த மாதம் இந்தியா, தென் ஆப்பிரிக்கா என அடுத்தடுத்த தொடர்களிலும் விளையாடியது.
இந்நிலையில் தற்போது வருகிற செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததில்லை. பாகிஸ்தானுக்குப் பதிலாக 2012, 2016-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு தொடர்களை இங்கிலாந்து அணி விளையாடியது.
மேலும் கடந்த வருடம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சென்று விளையாடயிருந்த இங்கிலாந்து அணியும் கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு பாகிஸ்தானில் 7 டி20 ஆட்டங்களை விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி டி20 தொடர் செப்டம்பர் 20இல் தொடங்கி அக்டோபர் 2இல் முடிவடைகிறது. முதல் நான்கு போட்டிகள் கராச்சியிலும், கடைசி மூன்று ஆட்டங்கள் லாகூரிலும் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரை முடித்துவிட்டு டி20 உலகக் கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது இங்கிலாந்து அணி.
மேலும் டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு டிசம்பரில் பாகிஸ்தானில் 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.