PAK vs ENG 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து டிசம்பர் 1ஆம் தேதியன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களை போல் சரமாரியாக வெளுத்து வாங்கினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் 657 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஜாஹிட் முஹம்மது 4 விக்கெட்களையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்தது என்றே சொல்லலாம். ஏனெனில் இங்கிலாந்து வீரர்களாவது அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பவுலர்களுக்கு தொல்லை கொடுத்தார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரிய நிதான ஆட்டத்தை கையிலெடுத்த பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் அசாத் சபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் ஆரம்பம் முதலே நங்கூரத்தை போட்டு விக்கெட்டை விடமாட்டோம் என்று அடம் பிடிக்கும் வகையில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தார்கள்.
இதனால் 2ஆவது நாள் ஆட்ட நேரம் முடியும் வரை விக்கெட்டை விடாமல் 180/0 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க துவங்கியுள்ளது. அதில் இமாம் 90 ரன்களுடனும் ஷபிக் 89 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து 476 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி தொடர்ந்தது.
இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறுதி நேரத்திலேயே இமாம் உல் ஜசம் சதமடிக்க, அவரைத் தொடர்ந்து அப்துல்லா ஷஃபிக்கும் தனது சத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இரு அணிகளின் தொடக்க வீரர்கள் சதமடித்த முதல் டெஸ்ட் போட்டியாக இது வரலாற்று சாதனை பட்டியளில் இணைந்தது.
தொடக்க விக்கெட்டுக்கு 225 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்த இந்த இணை அதன்பின் விக்கெட்டை இழந்தது. அதன்படி 114 ரன்களில் ஷஃபிக் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 121 ரன்களோடு இமாம் உல் ஹக்கும் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய அஸார் அலி 27 ரன்ளில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் கேப்டன் பாபர் ஆசாம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் சதமடித்து அசத்தினார். இதற்கிடையில் சௌத் சகீல் 37 ரன்களில் ஆடமிழக்க, 136 ரன்கள் சேர்த்திருந்த பாபர் ஆசாமும் விக்கெட்டை இழந்தார். பின் 29 ரன்கள் எடுத்த முகமது ரிஸ்வானும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற நான்காம் நாட்டத்தின் உணவு இடைவேளையிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 579 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் வில் ஜேக்ஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் முதல் பதிலும், ஒல்லி போப் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸாக் கிரௌலி - ஜோ ரூட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.இதில் ஸாக் கிரௌலி 24 ரன்களிலும், ஜோ ரூட் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.