இந்த தோல்வி நிச்சயம் காயப்படுத்தும் - ஜோஸ் பட்லர்!

Updated: Sun, Oct 15 2023 22:50 IST
இந்த தோல்வி நிச்சயம் காயப்படுத்தும் - ஜோஸ் பட்லர்! (Image Source: Google)

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்டிவருகிறது. அதிலும் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் 80 ரன்கள், இக்ரம் அலிகில் 58 ரன்களைச் சேர்க்க 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே ஆஃப்கனிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஹாரி ப்ரூக் மட்டும் 66 ரன்களைச் சேர்த்திருந்தார். ஆஃப்கானிஸ்தன் தரப்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது ஏமாற்றமாக இருந்தது. முதல் பந்தே வைடாக லெக் சைடு பவுண்டரிக்கு சென்றது. அங்கிருந்தே ஆட்டத்தின் டோன் அமைந்துவிட்டது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் எங்களை விட மிஞ்சி செயல்பட்டார்கள். 

எங்களுடைய செயல்முறை பேட் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மோசமாக இருந்தது. இந்த மாட்ட கிரிக்கெட்டில் நாங்கள் விரும்பும் அளவுக்கு எங்களுடைய செயல்பாடு அமையவில்லை. இதுதான் நாங்கள் போட்டியில் வீழ்ந்த இடம். ஆஃப்கானிஸ்தான் சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி வரவில்லை. ஆடுகளத்தில் இரண்டு வேறு விதமான பவுன்ஸ் இருந்தது. 

அவர்கள் ஸ்டெம்ப் லைனில் இருந்தார்கள். நாங்கள் இன்று போதுமான அளவுக்கு இல்லை. இந்த தோல்வி நிச்சயம் காயப்படுத்தும். காயப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மீண்டு வருவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முடியும். ஒட்டுமொத்தமாக நாங்கள் இருக்க விரும்பும் வகையில் இல்லை. நாங்கள் எதை விரும்புகிறோமோ அப்படியே களத்திற்கு உள்ளேவும் வெளியேவும் இருக்க முயற்சி செய்வோம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை