அண்டர் 19 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
ஆண்டர் 19 உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ தாமஸ் அரை சதமடித்து அவுட்டானார். ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ஜார்ஜ் பெல், அலெக்ஸ் ஹார்டன் ஜோடி அரை சதமடித்தது. பெல் 56 ரன்னும், ஹார்டன் 53 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மீண்டும் மழை பெய்ததால் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியில் அல்லா நூர் 60 ரன்னும், முகமது இஷ்டாக் 43 ரன்னும் எடுத்தனர். ஹாதி 37 ரன் எடுத்து அவுட்டாகாமல் ஒருந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ரெஹான் அகமது 4 விக்கெட்டும், தாமஸ் அஸ்பின்வால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இங்கிலாந்து 15 ரன் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.