ENG vs NZ, 2nd Test: பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் அதிரடியில் நியூசிலாந்தை பந்தாடியது இங்கிலாந்து!

Updated: Tue, Jun 14 2022 22:19 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 553 ரன்களையும், அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அதிரடியான சதத்தின் மூலம் 539 ரன்களையும் எடுத்தது. 

இதையடுத்து 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் டாம் லேதம் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இந்த விக்கெட்டின் மூலம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 650ஆவது விக்கெட்டையும் வீழ்த்தினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த வில் யங் - டேவன் கான்வே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமும் கடந்தனர்.

பின்னர் 52 ரன்களில் டேவன் கான்வே விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த வில் யங்கும் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹென்றி நிக்கோலஸ் 3, டாம் பிளெண்டல் 24, மிட்செல் பிரேஸ்வெல் 25, டிம் சௌதி 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ஆனாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற டேரில் மிட்செல் விக்கெட்டை இழக்காமல் நின்று ஆடி வருகிறார். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்துள்ளது.

இதையடுத்து இன்று தொடங்கிய 5ஆம் நாள் ஆட்டத்தை நியூசிலாந்து தரப்பில் டெரில் மிட்செல் 32 ரன்களுடனும், மேட் ஹென்றி 8 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் மேட் ஹென்றி 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கைல் ஜேமிசனும் ஒரு ரன்னுடன் வெளியேறினார்.

மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த டேரில் மிட்செல் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக கடைசி விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்த ட்ரெண்ட் போல்ட் அதிரடியாக விளையாடினார்.

அதன்பின் 17 ரன்கள் எடுத்திருந்த ட்ரெண்ட் போல்ட் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் டெரில் மிட்செல் 62 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளைக் கைப்பாற்றினார். 

இதன்மூலம் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 299 ரன்களை நிர்ணயித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் லீஸும் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசிய ஜானி பேர்ஸ்டோவ் 77 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். மறுமுனையிலிருந்த பென் ஸ்டோக்ஸும் அரைசதம் கடந்தார். பின்னர் 14 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசிய ஜானி பேர்ஸ்டோவ் 136 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

மறுமுனையிலிருந்த பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கிலும் வென்றது. மேலும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பதவியேற்ற முதல் தொடரையே இங்கிலாந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை