இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்டலில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது.
இதனையடுத்து இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்கியது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹீத்தர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை தொடத்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்த பூனம் ராவத் - கேப்டன் மிதாலி ராஜ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறுக சிறுக அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் பூனம் ராவத் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மிதாலி ராஜ் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 56ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்ததார்.
அதன்பின் 45வது ஓவரில் எக்ளெஸ்டோன் வீசிய 3வது பந்தில் மிதாலி ராஜ் 72 ரன்கள் (108 பந்துகள், 7 பவுண்டரிகள்) எடுத்திருந்த நிலையில் கிளின் போல்டாகி வெளியேறினார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் எக்ளெஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.