டாப் ஆர்டரை மட்டுமே நீங்கள் நம்பி இருக்க கூடாது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 91 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், இறுதிவரை போராடிய ஆயூஷ் பதோனி 74 ரன்களையும், அப்துல் சமத் 45 ரன்களையும் சேர்த்த நிலையிலும், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த், “நாங்கள் நிச்சயமாக அதிக ரன்களைக் கொடுத்துவிட்டோம். மேலும் தவறான நேரத்தில் முக்கியமான கேட்சுகளை நீங்கள் விட்டுவிடும்போது, அது உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த மைதானத்தில் ஸ்விங் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆரம்பத்தில் நாங்கள் சரியான லெந்தில் பந்துவீசவில்லை. ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த மூன்று போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றால், நிச்சயமாக அதை மாற்ற முடியும். உங்கள் டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும் போது இது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால் அனைத்து போட்டிகளிலும் அவர்களை மட்டுமே நீங்கள் நம்பி இருக்க கூடாது. அதனால் நாங்கள் ஆட்டத்தை ஆழமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர்களால் எங்களுக்கு கடினமான வேலையைச் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது வெற்றிபெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.